டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில்  விவசாயிகள் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணிக்கு வந்த விவசாயிகளை டெல்லி திக்ரி எல்லையில், பொதுமக்கள் மேளதாளத்துடன் மலர்தூவி வரவேற்றனர்.

மோடி அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் 62வது நாளாக  போராடி வருகின்றனர். இது தொடர்பாக 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும்,  முடிவு எட்டப்படாத நிலையில் குடியரசுத் தினமான  இன்று டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர்.

3 வழியாக டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீசார் அனுமதி கொடுத்தனர். மற்ற இடங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பேரணியினர் நுழையாதவாறு தடுப்புகள் போடப்பட்டு உள்னன.

இந்த நிலையில்  திக்ரி எல்லைக்கு வந்த விவசாயிகள் பேரணிக்கு பொதுமக்கள் மேளதாளத்துடன், மலர் தூவி வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

விவசாயிகளின் பேரணியின்போது, சில இடங்களில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால், அங்கு விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  சில இடங்களில் விவசாயிகள் மீது கண்ணீர்புகைக் குண்டும் வீசப்பட்டது.  இதனால் பதற்றம் நிலவி வருகிறது.