டெல்லி: குடியரசு தினவிழாவையொட்டி விவசாயிகள் பேரணிக்கு பிற்பகலில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தடை மீறி விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால்,  டெல்லி எல்லையில்  விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள   மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி,. டெல்லி எல்லையில் கடந்த 62 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  டெல்லி எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை மறித்துப் போராடி வருகின்றனர். இதனால், டெல்லியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தலையிட மறுத்து, டெல்லி காவல்துறை முடிவெடுக்க அறிவுறுத்தியது.

அதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு,  டெல்லி குடியரசு தின அணி வகுப்பு முடிந்த பிறகு 12 மணிக்கு ப மேல்தான் இந்தப் பேரணி தொடங்க வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர். ஆனால், விவசாயிகள் காவல்துறை அனுமதியை மீறி முன்னதாகவே பேரணியை தொடங்கியதாக கூறப்படுகிறது.  அதை தடுக்கும் வகையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு பேரணியினர் சென்றதால், காவல்துறையினர் அவர்கள்மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்தனர்.

ஆனால், விவசாயிகள் காவல்துறையினரின்  தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு தங்கள் டிராக்டர்களோடு எல்லையைக் கடந்து டெல்லிக்குள் நுழைந்தனர்.  இதைக் தடுக்க  டெல்லி சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்.

இதே போன்று சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதனால், பல இடங்களில் பரபரப்பும், பதற்றம் நிலவி வருகிறது.