சென்னை: ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னை ரிசர்வ் வங்கி இயக்குனர் இன்று நிதியமைச்சர் பிடிஆர் உடன் சந்தித்து பேசினார். அப்போது, தவறுக்கு மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின கொடியேற்று விழாவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடபட்டபோது, எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் மற்றும் பிராந்திய இயக்குனர் சாமி,, இன்று தலைமைச் செயலகம் வந்து, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்யும் சந்தித்து பேசினார்.
மேலும் இதுதொடர்பான இன்று மாலை ரிசர்வ் வங்கி தரப்பில் விரிவான அறிக்கை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.