சென்னை: ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின கொடியேற்று விழாவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடபட்டபோது,  எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி நேற்று அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. அதுபோல, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும்போது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என தமிழகஅரசு அரசாணை போட்டுள்ளது. ஆனால், ஒரு சில அதிகாரிகள் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று பாடினர். பலர் எழுந்து நிற்காமல் அமர்ந்து கொண்டே இருந்தனர். இது சர்ச்சையானது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியளார்களிடம்,   ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை…. கோர்ட் உத்தரவிட்டுள்ளதா எழுந்து நிற்க வேண்டும் என்று…..’ கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் தமிழ் தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.  அதில், தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதுடன், அரசு உத்தரவை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.