சென்னை: குடியரசு தினவிழா நடைபெறுவதை ஒட்டி, மெரினா நினைவிடங்களுக்கு செல்ல இன்றும், நாளை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ள காவல் துறை, டிரோன்கள் பறக்கவும் தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொடியேற்றி வைக்கிறார். சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனால் சென்னை காமராஜர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் தலைமையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என 6,800 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கு மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அண்ணா சதுக்கத்தில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களுக்கு இன்றும் நாளை முற்பகல் வரை பொதுமக்களுக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
26ந்தேதி குடியரசு தினம்: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை – 5அடுக்கு பாதுகாப்பு