டெல்லி: உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு  ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது கொடூரமான செயல், அதை உடனே  நீக்குங்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதுகுறித்த பட்டியலுடன் பிரியங்கா காந்தி  இந்தக் கோரிக்கையை காந்தி வைத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வதுஅலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவால்  நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதை உடனே ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பான வழக்கில், கருத்து தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசு வரி தள்ளுபடி முடிவு எடுக்கும்வரை கருப்புப் பூஞ்சைக்கான மருந்தை வெளிநாடுகளில் இருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்யலாம். ஒருவேளை வரி தள்ளுபடி அளிக்கவில்லை என்றால் இறக்குமதியாளர் வரி செலுத்தட்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி,  கொரோனாவுக்கு எதிராகப் பொதுவாகப் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களின் பட்டியலை இணைத்து டிவிட் வெளியிட்டுள்ளார். அதில்,

“கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ்களுக்காகவும், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும், வென்டிலேட்டர்களுக்காகவும், ஆக்சிஜன்களுக் காகவும், மருந்து, தடுப்பூசிகளுக்காகவும் தடுமாறி வருகிறார்கள். ஆனால், உயிர் காக்கும் பொருட்கள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிப்பது கொடூரத்தையும், உணர்வற்ற நிலையையும் காட்டுகிறது.

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் பயன்படும் உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.