சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்றது வருகிறது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் குடியிருப்புகளும் அகற்றப்படுகின்றன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த குடும்பங்களுக்கு தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் தலா 390 சதுர அடியில் (ஒரு வீடு 17 லட்சம் ; 390 சதுர அடி) இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5000, வாழ்வாதார உதவிக்காக ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.