டெல்லி:

பணமதிப்பிழப்பை சீர்படுத்தும் பணி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையை அடைந்திருப்பதாக பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதி முதலே பணமதிப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியது. இது படிப்படியாக தற்போது நிறைவு பெறவுள்ளது’’ என்றார்.

மேலும், சக்திகாந்ததாஸ் கூறுகையில்,‘‘பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு முழுவதும் நீக்கப்பட்டுவிட்டது. வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை தவிர இதர அனைத்து கட்டுப்பாடுகளும் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு கட்டுப்பாடும் ஒரு சில நாட்களில் நீக்கப்பட்டுவிடும்.
மாதத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கு சில ஆயிரங்கள குறைவாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. பணமதிப்பை உயர்த்தும் செயல் 90 நாட்களுக்கும் குறைவான காலகட்டத்திலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் நடப்பு கணக்கில் இருந்து தினசரி பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டையும், ஓவர் டிராப்ட் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்க தளர்த்தியது. இதர கணக்குகளில் இருந்து வாரத்துக்கு பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடும் சில நாட்களில் தளர்த்தப்படும் என்று அறிவித்திருந்தது.

ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அளவுகோளை திணிக்கிறது. அதே சமயம் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் வங்கி கிளைகளிலும் பணபற்றாகுறை உள்ளது. புது 500, 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதை அதிகரித்தால் தட்டுப்பாடு முழு அளவில் நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.