டாக்டர் ஜானகி அம்மாள், லண்டன் பாலஸ்டன் குன்று பகுதியில் இன்றும் பூக்கும் மாக்னோலியா மலர்கள் இவர் பெயரைச் சொல்லும். உலகம் தன்னைத்தான் அழித்துக்கொள்ள உலக யுத்தங்களில் மும்மரமாய் இருந்த காலங்களில் இந்த மாக்னோலியா தாவரங்களை இப்பகுதியில் நட்டுவைத்து அழகுபார்த்தவர் இவர்தான்.
இளமைப்பருவம்:
டாக்டர் ஜானகி அம்மாள் உலகின் தலை சிறந்த தாவரவியல் வல்லுநர் மற்றும் சைட்டோஜெனிசிஸ்ட். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். நவம்பர் 4, 1897-ஆம் ஆண்டு பிறந்தவர். பிறந்த இடம் அந்தக்கால மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த தள்ளிசேரி என்ற ஊர். இவரது தந்தை திவான் பகதூர் இ.கே.கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள், பிறந்தது மொத்தம் மொத்தம் 19 பிள்ளைகள். இதில் பத்தாவதாக பிறந்தவர்தான் ஜானகி. இவரது தந்தையாகும் மிகப்பெரிய இயற்கை ஆர்வலர் ஆவார்.
தள்ளிசேரியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஜானகி சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். தாவரவியலில் தனது ஹார்னர்ஸ் டிகிரியை சென்னை மாநிலக் கல்லூரியில் 1921-ஆம் ஆண்டு முடித்தார்.
அதன் பிறகு சில காலம் சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியப் பணி செய்துவிட்டு அமெரிக்காவில் உள்ளா மிஷிகன் பல்கலையில் தனது முதுகலை படிப்பை 1925-இல் பார்பர் ஸ்காலர்ஷிப் உதவியுடன் முடித்தார். பின்னர் இந்தியா திரும்பி மீண்டும் சில காலம் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியப் பணி செய்துவிட்டு மீண்டும் மிஷிகன் சென்று தனது டி..எஸ்.சி படிப்பை 1931-இல் முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றினார்.
பணிக்காலம்:
அவர் சைட்டோஜெனிசிஸ் துறையில் நிபுணராக இருந்தபடியால் கோயமுத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி மையத்தில் மரபியல் சார்ந்த ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது பாப்புவா நியூகினியாவில் விளையும் சக்காரம் அஃபிசியானரம் என்ற மிக இனிப்புள்ள கரும்பு வகையை இந்தியா ஜாவாவில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் சுதந்திர போராட்ட தலைவரும் பிரபல அறிஞருமான மதன் மோகன் மாளவியா இந்தியா சொந்தமாக தனது கரும்பு வகையை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுவே கோவை கரும்பு ஆராய்ச்சி மையம் உருவாக காரணமாயிற்று.
ஜானகியின் ஆய்விம் மூலம் இந்திய சூழலில் அபாரமாக வளாரும் சுவைமிக்க கலப்பின வகை கரும்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அவர் வேலை செய்த இடத்தில் நிலவிய ஆணாதிக்க, சாதி வெறி அரசியல் பிடிக்காமல் அங்கிருந்து அவர் சீக்கிரமே கிளம்ப வேண்டியதாயிற்று. அவருக்கு லண்டனில் உள்ள ஜான் இன்ஸ் ஹார்ட்டிகல்சுரல் இன்ஸ்டிடியூட்டில் உதவி சைட்டாலஜிஸ்ட்டாக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1940 -1945 ஆண்டுகளில் அவர் அங்குதான் பணிபுரிந்தார். பல நேரங்களில் குண்டுவீச்சுக்கு பயந்து இரவில் டேபிளுக்கு அடியில் பதுங்கியிருக்க வேண்டியதாயிற்று. பகலில் மறுபடி வேலைக்கு திரும்ப வேண்டும்.
அதன்பின்னரே அவர் லண்டன் வைஸ்லியில் உள்ள ராயல் ஹார்டிகல்சர் சொசைட்டியில் சைட்டாலஜிஸ்ட்டாக பணிபுரியும் வாய்பை பெற்றார். இந்த இடம் அழகான பலவிதமான மரங்களுக்கு பெயர்பெற்றது. ஆண்டுதோறும் மலர் கண்காட்சி இங்கு நடக்கும். ஜானகிக்கு அதிக அனுபவங்களை அள்ளிக்கொடுத்தது இங்கு வேலை செய்த காலம் என்று சொல்லலாம். 1945 ஆம் ஆண்டு சிடி டார்லிங்டன் என்ற உயிரியலாளருடன் சேர்ந்து “த குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்ட்டிவேட்டட் ப்ளாண்ட்ஸ்” என்ற நூலை எழுதினார்.
இங்கு பணிபுரியும்போதுதான் அவருக்கு மாக்னோலியா தாவரத்தின் சைட்டோஜெனிசிஸ் பற்றி ஆராயும் வாய்ப்பு கிடைத்தது. ஜானகி அம்மாள் மாக்னோலியா தாவரத்தை நட்டுவைத்த லண்டன் பாலஸ்டன் குன்று பகுதியில் இன்றும் ஒருவகை மாக்னோலியா மலருக்கு “மாக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா திரும்புதல்:
அதன் பின்னர், பண்டித ஜவஹர்லால் நேருவின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் ஜானகி அம்மாள் இந்தியா திரும்பினார். பொட்டானிகல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டு லக்னோவிலும், ஜம்முவிலும் தாவரவியல் பூங்காக்கள் அமைய காரணமானார். கல்கத்தாவில் வசித்த புகழ்பெற்ற மரபியல் வல்லுநரான ஜேபி ஹால்டனுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது.
பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு முன்பாகவே பேராசிரியர் சி.வி ராமன் அவர்களிடம் நற்சான்றிதல் பெற்றிருந்த ஜானகி அம்மாள் இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு சிறிது காலமே அவர் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் த்ராம்பேயில் அட்டாமிக் ரிசர்ச் ஸ்டேஷனில் சிறிது காலம் பணி புரிந்தார். அவருக்கு 1977-இல் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அதன் பின்பு 1999 இல் அவரது பெயரால் இரு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஜானகி அம்மாள் 1984-ஆம் ஆண்டு மறைந்தார். ஆனாலும் கலப்பின கரும்பு தொடங்கி அவரது இனிப்பான படைப்புகள் அனைத்தும் இன்னும் அவரது பெயரை சொல்லியவண்ணம் இருக்கின்றன.