சென்னை: சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு கட்டமைப்பை நியாயப்படுத்த முடியாது என உத்தரவிட்டுள்ள சென்னை  உயர்நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வேளாங்கண்ணி சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

சென்னை திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர்,  தனது வீட்டுக்கு முன் தெருவை ஆக்கிரமித்து, அன்னை வேளாங்கண்ணி சிலை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கூறியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அந்த கட்டிடத்துக்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டுள்ளதாகவும், அதனால், அந்த சிலையை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி வி.லட்சுமி நாராயணன்  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில், அந்த இடம் சர்க்கார் புறம்போக்கு நிலம் என்றும், பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ருந்து.

இதையடுத்து, வேளாங்கண்ணி சிலை அமைக்கப்பட்டுள்ள அந்த  கட்டிடத்தை அகற்றுவது தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், ‘ பொதுப் பாதையில் மத கட்டமைப்புகள் கட்டுவதற்கு எந்த ஒரு நபருக்கும் உரிமை இல்லை என, உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய ஆக்கிரமிப்புகளை, மத உணர்வுகளை காரணமாகக் கூறி நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.