சென்னை: இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் இன்று மாலை  சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலை அனுப்பி வைத்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உதவி செய்துவருகிறது. இந்த நிலையில் தமிழகஅரசும் உதவிகள் செய்ய மத்தியஅரசிடம் அனுமதி கோரியது. மத்தியஅரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழக முதல்வர் பொதுமக்களிடம் இருந்து நிவாரண நிதி கோரியிருந்தார். மேலும், அரசியல் கட்சிகளும் நிதி வழங்கின. எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். இதன்மூலம் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவியின்  முதல் கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் கப்பலில்  இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கப்பலுக்கு சென்று ஆய்வு செய்து, பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து கப்பலை அனுப்பி வைத்தார்.