ஜியோ ஆதிக்கம் : 50000 பேர் பணி இழக்கும் அபாயம்

Must read

மும்பை

ரிலையன்ஸ் ஜியோவின் ஆதிக்கம் தொலை தொடர்புத்துறையில் அதிகரிப்பதால் மற்ற நிறுவனங்களில் 50000 பேர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்தியாவில் பணி இழப்பு அதிகரித்து வருகிறது.   அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும்,  தொலை தொடர்புத் துறையிலும் பலர் பணி இழந்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் தனது புதிய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மூலம் தொலைத் தொடர்புத் துறையில் நுழைந்தார்.    ஏற்கனவே இருந்த பல தொலை தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போட அவர் பல இலவச திட்டங்களை அறிமுகம் செய்தார்.  அத்துடன் இண்டர்நெட் கட்டணத்தை வெகுவாக குறைத்து அறிவித்தார்.   அதனால் மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறினார்கள்.

இதையொட்டி மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட ஆரம்பித்தது.    அத்துடன் வருமான இழப்பினால் அவர்கள் ஆட்குறைப்பு செய்ய ஆரம்பித்தனர்.    ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கத்தினால் பல வங்கிகளும் இந்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உதவி செய்வதை படிப்படியாக குறைந்துக் கொண்டன.    அது பல நிறுவனங்களுக்கு மிகவும் கஷ்டத்தை அளித்தது.    செலவைக் குறைப்பதன் மூலம் இழப்பைக் குறைக்கும் எண்ணத்தில் மேலும் மேலும் ஆட்குறைப்பில் இந்த நிறுவனங்கள் ஈடுபட ஆரம்பித்தன.

இது குறித்து மனித வள மேம்பாட்டு ஆலோசகர் ஆதித்ய நாராயண் மிஸ்ரா, “தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  சென்ற வருடம் சுமார் 40,000 பேர் பணி இழந்துள்ளனர்.    இந்த வருடம் சுமார் 50000 பேர் பணி இழக்க நேரிடும்.    அந்த அளவுக்கு தொலைத் தொடர்புத் துறை மோசமாகிக் கொண்டு வருகிறது.   ஒரு சில புதியவர்களின் வருகையால் ஏற்கனவே இருப்பவர்கள் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது”   என அவர் ஜியோவின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article