மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா தாக்கூர் விடுவிக்கப்பட்டதால் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது பா.ஜ.க.

இப்படி ஒரு தலைப்பில் வெளியான செய்தி 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது, அதை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அன்று ஒரே நாளில் பார்த்துள்ளனர்.

ஆனால் உண்மையில், மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பிரக்யா தாக்கூர் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் பெற்றிருந்தார். இதனை திரித்து கூறி பிரச்சாரம் செய்ததால் பா.ஜ.க. எம்.பி. யாக தேர்ந்தடுக்கப்பட்ட இவர் மீதான வழக்கு மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த செய்தி நியூ ஜ் என்ற இணைய ஊடகத்தில் வெளியானது, அதன் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த செய்தியின் சாராம்சம் பா.ஜ.க. வேட்பாளர் குற்றமற்றவர் என்பது போல் சித்தரித்தது.

இந்த ஒரு செய்தி மட்டுமல்ல அதே ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டம் ஓன்றில் பேசிய ராகுல் காந்தி, 1999 ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் இருந்த நேரத்தில் மசூத் அசார் என்ற தீவிரவாதியை விடுதலை செய்தது.

பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் நேரத்தில் தீவிரவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டதையும் அவர்களோடு மென்மையான போக்கை கையாண்டதையும் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, தீவிரவாதிகளிடம் பா.ஜ.க. எப்படி நடந்து கொள்கிறது என்பதைக் குறிக்க கிண்டலாக ‘மசூத் அசார் ஜி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தியையும் அதேபோல் ‘ராகுல் காந்தி தீவிரவாதி மசூத் அசாரை மசூத் அசார் ஜி என்று குறிப்பிட்டார்” என்று தலைப்பிட்டு தவறான பிரச்சாரம் மேற்கொண்டது, இதையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது நியூ ஜ் பதிவிட்ட முதல் நான்கு நாளில் 6.5 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர்.

இவ்விரு முகநூல் பதிவையும் விளம்பரப்படுத்த நியூ ஜெ நிறுவனம் பணம் செலவிட்டுருப்பது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஜியோ நெட்ஒர்க் நிறுவனத்தின் இணை நிறுவனம் தான் இந்த நியூ ஜ் நிறுவனம்.

 

இந்த சங்கிலித்தொடர் நிறுவனங்கள் மூலம் பா.ஜ.க. வின் சமூக ஊடக பிரச்சாரங்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறைமுகமாக பணம் செல்வழித்திருப்பதுடன் பா.ஜ.க ஆட்சி அமைய ரிலையன்ஸ் நிறுவனம் பெருமுதலீடு செய்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய (ECI) சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு முகநூல் பக்கத்தின் விளம்பர விதிகள் மற்றும் செயல்பாடுகளைப் பயன்படுத்தி பா.ஜ.க.வுக்கு சாதகமான பிரச்சாரத்தை மேற்கொள்ள இந்தியாவின் முன்னணி தொழில்நிறுவனம் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டிருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஒன்பது மாநிலத் தேர்தல்களில் வேட்பாளரின் நேரடி நிதி மற்றும் அங்கீகாரம் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரிக்கும் விளம்பரங்கள் வெளியானது.

2019 பிப்ரவரி மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரையிலான 22 மாத காலத்தில் வெளியான 5,36,070 அரசியல் சார்ந்த பதிவுகளையும் விளம்பரங்களையும் ஆய்வு செய்த இந்தியாவைச் சேர்ந்த ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ என்ற தன்னார்வ நிறுவனம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு கட்சிக்கு குறிப்பாக பா.ஜ.க. வுக்கு ஆதரவான செயல்பாடுகள் மூலம் முகநூல் நிறுவனம் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைத்துள்ளது என்பதை ஆய்வு செய்துள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் உருவான நியூ ஜ் என்ற இணைய ஊடகம், முகநூல் பக்கத்தில் விளம்பரம் மேற்கொள்ள தேவையான கட்டணத்தை செலுத்துவதோடு, செய்தி என்ற பெயரில் நடுநிலை இல்லாத மதம் சார்ந்த, இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகள், தவறான பதிவுகள் மூலம் பா.ஜ.க. வின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வந்ததை இவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், பா.ஜ.க. வின் சமூக ஊடக பிரச்சாரத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மறைமுக முதலீட்டையும் அம்பலப்படுத்தியுள்ளனர்.