சென்னை:

காய்கறி வண்டியில் இறந்தவரின் சடலத்தை ஏற்றிச்சென்றதாக சர்ச்சை எழுந்த பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியோர்களை அனைவரையும் மீண்டும் கருணை இல்லத்திலேயே ஒப்படைக்கும்படி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்ட முதியவர்கள் அனைவரையும் இன்று இரவுக்குள் மனுதாரரின் கருணை இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம்,  செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில், ஆம்புலன்ஸ் போல வடிவமைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தில் மூதாட்டி ஒருவர் கட்டாயப்படுத்தி கடத்திச் செல்லப்பட்டதாக புகார் எழுந்தது.

காவல்துறையினரின் அதிரடி சோதனையின்போது, அது போலியான ஆம்புலன்ஸ் என்றும், அதனுள் ஒரு இறந்த பெண் சடலம் இருந்தது தெரிய வந்தது. அந்த இறந்த பெண்ணுடன் முதியவர் ஒருவரும் படுக்க வைக்கப்பட்ருந்த நிலையில், அதனுடன் காய்கறிகளும் ஏற்றிச் செல்லப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆம்புலன்ஸ்,   செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் செயல்பட்டு வரும்  செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு சொந்தமானது என்றும், அந்த கருணை இல்லத்தில் முதி யோர்கள் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அங்கு முதியோர்கள் கொடுமைப்படுத்தப் படுவதாகவும்,  இறந்த முதியவர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களின் எலும்புகள் மருத்துவ தேவைக்காக வெளிநாடு களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த  கருணை இல்லத்தை ஆய்வு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கிருந்த  294 முதியவர்களை மீட்டு, வெவ்வெறு இல்லங்களில் சேர்தனர்.

இந்நிலையில், பாலேஸ்வரம் கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குனரான பாதிரியார் தாமஸ், சென்னை ஐகோர்ட்டில், முதியவர்கள் குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இநதை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற அடுத்தக்கட்ட விசாரணையின்போது,  கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட வர்களை,  கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாலேஸ்வரம் கருணை இல்லம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்,  ‘கருணை இல்லத்தில் இருந்து வருவாய் அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற முதியவர்களில் 12 பேர் இறந்து விட்டதாக கூறினார். மேலும், முறையாக முதியவர்கள் பராமரிக்கப்படாததால், அவர்கள் இறந்து போனதாகவும், மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, , ‘மனுதாரரின் கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட 294 முதியவர்களில் பலர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, கருணை இல்லத்தில் இருந்து அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்ட முதியவர்கள் அனைவரையும் இன்று இரவுக்குள், மனுதாரரின் கருணை இல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும், அவ்வாறு ஒப்படைத்த பின்னர், அதுகுறித்து விரிவான அறிக்கையை வருவாய் துறை அதிகாரிகள்  நாளை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டனர்.