சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் சார்பதிவாளர் பொறுப்புகளை கவனிக்கும் உதவியாளர்கள் 5 பேரை தமிழகஅரசு அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம் சென்னையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில், அதிக அளவு முறைகேடு நடைபெறும் துறைகளில் முதன்மையானது பத்திரப்பதிவு துறை. இதில் பணியாற்றும் சார்பதிவாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் அடிக்கடி  விடுமுறையில் செல்வதும், அவர்களுக்கு பதிலாக பொறுப்பு உதவியாளர்களை வைத்து பத்திரப்பதிவு செய்வதுமான நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

இதுகுறித்து தமிழகஅரசுக்கு ஏராளமான புகார்கள் குவிந்த நிலையில், அமைச்சர் மூர்த்தி பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்த விவகாரம் தெரிய வந்தது. இதையடுத்து,  பொறுப்பு உதவியாளர்கள் 15 நாட்களுக்கு மேல் பொறுப்பாளர்களாக இருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தென் சென்னை உதவி ஐஜி சத்தியப்பிரியா தனது எல்லைக்குள் இதுபோல் பொறுப்பு உதவியாளர்களாக உள்ள 5 பேரை  அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தாம்பரம் அருகே படப்பை சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் எம்.ராதா, தென் சென்னை மாவட்டபதிவாளர் (நிர்வாகம்) அலுவலகத்திற்கும், தி.நகர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் மகாலிங்கம், தென் சென்னை இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கும், இந்தப் பணியிடத்தில் இருந்த சங்கர், தென் சென்னை அசல் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கும், தென் சென்னை மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) அலுவலக உதவியாளர் பிரபாகர், தி.நகர் சார்பதிவாளர் உதவியாளராகவும், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் நெப்போலியன், சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.