சென்னை:

வீடுகளில் உள்ள கிணறுகள், போர்வெல் மற்றும் கைவிடப்பட்ட போர்வெல் குறித்து பதிவு செய்யுங்கள் என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம்  சென்னை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.   நவம்பர் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் மரணத்தை தழுவிய நிலையில், தமிழகம் முழுவதும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள், கிணறுகள், கைவிடப்பட்ட போர்வெல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மூடப்படாத கிணறுகளை உடனே மூடவும், கைவிடப்பட்ட போர்வெல்கள், ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னையிலும், குடியிருப்பாளர்கள், தங்களது வீடுகளில் உள்ள கிணறுகள், கைவிடப்பட்ட போர்வெல்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ வாட்டர் தெரிவித்து உள்ளது.   அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை வசூழங்கப்படம் என்றும் எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து  மெட்ரோவாட்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை பெருநகர பகுதி நிலத்தடி நீர் (ஒழுங்குமுறை) சட்டம், 1987 இன் விதிகளின்படி நவம்பர் 10 அல்லது அதற்கு முன்னர் தங்கள் வளாகத்தில் மூழ்கிய போர்வெல்கள் மற்றும் திறந்த கிணறுகளை பதிவு செய்யுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள மெட்ரோவாட்டர் அலுவலகத்திற்கு போர்வெல்கள் பற்றிய விவரங்களை அலுவலகத்துடன் கிடைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வழங்கலாம், இது போர்வெல்கள் / திறந்த கிணறுகள், நிலத்தடி நீர் பயன்பாட்டின் நோக்கம் மற்றும் நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் பற்றிய தரவுகளை ஒருங்கிணைக்க உதவும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், குடியிருப்பாளர்கள் பயன்படுத்தப்படாத போர்வெல்களை மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்ற வேண்டும் அல்லது களிமண், மணல் மற்றும் கற்பாறை அல்லது தரை மட்டம் வரை பிற பொருட்களால் நிரப்ப வேண்டும். தேவைப்படுவோர்   அருகிலுள்ள மெட்ரோ வாட்டர் டிப்போ அலுவலகத்திலிருந்து தொழில்நுட்ப உதவியை நாடலாம் அல்லது 044-28454080 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

அத்துடன், கிணறுகளின் வகைகள் குறித்த தகவல்களை ஒரு சில நாட்களில் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான வசதிகளும்  செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அரசாங்க உத்தரவை பிறப்பித்துள்ளது.