விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – கனிமொழி எம்.பி. உறுதி

Must read

கோவை:
விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதியாக தெரிவித்தார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையத்தில் பழங்குடியின பெண்கள், கல்லூரி மாணவிகளிடையே கலந்துரையாடினார்.

வெள்ளியங்காடு அரசு பள்ளியில் படித்து திருச்சி ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி சபிதா மற்றும் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவி ரம்யா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். பின்னர் மாணவிகளிடையே கனிமொழி,

கல்வியில் சாதிக்க இந்த இளம்பெண்கள் இங்கு இருக்கக் கூடியவர்களுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள இளம்பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்க கூடியவர்கள். ஏனென்றால் ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும். வெற்றி பெற்று காட்ட முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

எத்தனை தடைகள் வந்தாலும், எல்லா தடைகளையும் தாண்டி ஒரு பெண்ணால் சாதிக்க முடியும், வெற்றி பெற முடியும் என்பதற்கு இந்த பழங்குடியின மாணவிகளே முன் உதாரணம்.

இவர்களை பார்த்து இன்னும் நிறைய இளம்பெண்கள் இவர்களை முன்னுதாரணமாக கொண்டு படித்து வாழ்க்கையில் எங்களால் சாதிக்க முடியும் என்று சாதித்து காட்ட வேண்டும். இங்கு பேசிய பலர் தங்களுடைய பகுதி குறைகளை எடுத்துக் கூறி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க. தலைமையிலான அரசு அமைந்த பின்பு சரி செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article