டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர் என் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. ஆளுநர் குறித்து திமுக பத்திரிகையான முரசொலியில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதுபோல திமுகவினரும் ஆளுநரை கடுமையான சொற்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் சமீபத்தில் ஆளுநர் மாளிகை வாசலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில், ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என புகார் கூறியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதாகவும், குறிப்பிட்ட காலம் வரம்புக்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மசோதாக்கள் அரசு உத்தரவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஒரு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.