உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கங்கை, யமுனை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காசியாபாத், வாரணாசி, ப்ரயாக்ராஜ் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. அதனால், இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தையும் பாதிப்பையும்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரையான அஸ்ஸி காட் பகுதியில் ஆற்றுவெள்ளம் ஏற்படுத்திய சேதத்தையும் சென்று பார்த்தார்.

அப்போது முதல்வர் வருகைக்காக நதிக்கரையை ஒட்டிய சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால் மழை வெள்ளத்தின் மீது உயரமான நடைமேடை அமைத்து அதன் மீது சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.

இந்த நடைமேடை வழியாக சென்று முதல்வர் பாதிப்புகளை பார்வையிட்டது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருவதுடன், இது பாஜக-வின் வேறு மாதிரி அணுகுமுறை என்று கலாய்த்து வருகின்றனர்.