சென்னை:

ஜினி அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில் தற்போது அவர் நடத்தி வரும் ரசிகர் சந்திப்பு முக்கியத்தும் பெற்றிருக்கிறது.

கடந்த 26 முதல் நடைபெற்று வரும் இந்த சந்திப்பு 31ம் தேதி நிறைவு பெறுகிறது. அரசியல் பிரவேசம் குறித்து அன்று அறிவிப்பதாக ரஜினி ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதாவது அரசியலுக்கு வருவதா இல்லையா என்பதை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பில் ரசிகைகள் கூட்டம் இல்லை. தினம் ஆயிரம் ரசிகர்கள் ரஜினியுடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களில் ரசிகைகள் ஓரிருவர்தான். மற்றபடி ஆண் ரசிகர்களே நிறைந்திருக்கிறார்கள்.

இதைக் குறிப்பிட்ட பலரும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தில் விசாரித்தோம்.

அவர்கள் தெரிவித்ததாவது:

“பொதுவாகவே நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் ஆண்கள்தான் தீவிரமாக ஈடுபடுவார்கள். நடிகரின் படம் வெளியாகும்போது போஸ்டர் அடித்து ஒட்டுவது, பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைப்பது போன்றவற்றை ஆண்கள்தான் செய்வார்கள். மன்ற உறுப்பினர்களில் கூட 99 சதவிகதம் ஆண்கள்தான் இருப்பார்கள். இது  எல்லா நடிகர் மன்றங்களுக்கும் பொதுவானது.

பெண்களைப் பொறுத்தவரை நடிகருக்கு ரசிகையாக இருந்தாலும் மன்ற உறுப்பினர்களாக சேர்வது அரிது” என்றார்கள்.

மேலும், “ரஜினியின் இந்த ரசிகர் சந்திப்பு மிகுந்த திட்டமிடலோடு நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பாஸ்கள் அனுப்பப்பட்டு, அவற்றில் ரசிகரின் புகைப்படம் ஒட்டி மன்ற மேலிடத்தின் அனுமதி பெற்ற பிறகு அதை வைத்து கூட்டத்துக்கு வர முடியும். நீண்ட நாட்களுக்குப் பிறகான சந்திப்பு என்பதால் இத்தனை வருடம் மன்றத்தில் தீவிரமாக செயல்பட்ட (ஆண்) ரசிகர்களே அதிகம் வருகிறார்கள்.

ஒரு பாஸூக்கு ஒருவர் மட்டுமே அனுமதி. அவருடன் மனைவியோ சகோதரியோ வர வேண்டும் என்றால் தனியாக பாஸ் வாங்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை. ஆனாலும் சில மாவட்ட பொறுப்பளர்கள் சிலர் இரண்டு மூன்று பாஸ்களை வாங்கி மனைவி, சகோதரிகளை அழைத்து வந்தனர். இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. ஆகவேதான் பெண்கள் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது” என்று தெரிவித்தார்கள்.