கங்கை நதிக்கு பாகீரதி எனப் பெயர் வரக் காரணம் என்ன?
பகீரதன், கங்கையானது பூமிக்கு வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம் செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள்.
ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதைப் பகீரதனுக்கு உணர்த்தினாள். உலகாளும் சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான் இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.
உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார். சிவனார் மனம் கனிந்தார். குளிர்ந்தார். பகீரதனுக்கு அருள் புரியத் திருவுளம் கொண்டார்.
 அதன்படி, பிரவாகமெடுத்து தபதபவென வந்த கங்கையை தன் சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி அடைந்தனர் என்கிறது புராணம்.
அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு ‘பாகீரதி’ என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
இதனால்தான் மிகப்பெரிய காரியங்களைச் செய்யும் போது, பகீரதப் பிரயத்தனம் என்று சொன்னார்கள்.
பகீரதப் பிரயத்தனம் (கடுமையான விடாமுயற்சி) எனும் சொல்லும் இவரது கடினமான விடாமுயற்சியைக் குறித்து, செய்வதற்கு அரியது எனக்கருதப்படும் செயலுக்கு வழங்கப்படலாயிற்று.
கங்கை பூமிக்கு வந்த நாள் வைகாசி மாத வளர்பிறை பத்தாம் நாள் என வழங்கப்படுகின்றது. கங்கையைப் பகீரதன் கொண்டு வந்ததால், கங்கைக்கு பகீரதி என்றும் பாகீரதி என்றும் பெயர் ஏற்பட்டது.