சென்னை: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் 9நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது என குறிப்பிட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தில்,   ”மக்களின் மத நம்பிக்கைகள் தவறானவை என தீர்ப்பளிப்பது கடினமானது”  என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள், ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு சூரியகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வில் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பர் 28 அன்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களும் போராட்டங்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நவம்பர் 14, 2019 அன்று இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சுமார் 65 மறுஆய்வு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை மட்டுமின்றி மசூதிகளில் பெண்கள் நுழைவு, பார்சி பெண்கள் உரிமை போன்ற மதச் சுதந்திரம் சார்ந்த பெரிய கேள்விகள் இதில் அடங்கியுள்ளதால், இதை 7 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

இதையடுத்து, சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்று 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களில் இருந்து எழும், அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி 9 எஸ்.ஏ. போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது. ஆனாலும், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை.

இந்த சூழலில் தான், 6 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிலவும் கட்டுப்பாடுகள் மத நம்பிக்கையின் ஒரு பகுதி, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது பெண்களை இழிவுபடுத்துவதற்கோ அல்லது தீட்டு போன்ற காரணங்களுக்காகவோ அல்ல; மாறாக, ஐயப்ப பகவானின் பிரம்மச்சாரி என்ற தனித்துவமான தன்மையை பாதுகாக்கவே இந்த மரபு என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

 மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வாதிடும்போது,  அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதச் சுதந்திரங்களை விளக்குவதற்கு, இத்தகைய அகநிலை சார்ந்த அளவுகோலை (subjective standard) சார்ந்திருப்பது ஒரு ஆபத்தான முன்மொழிவு என்றும் அவர் எச்சரித்தார். ஏப்ரல் 15 அன்று, சபரிமலை வழக்கு தொடர்பான பரிந்துரை மனுவின் மீதான விசாரணை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் நடைபெற்றபோது, ​​அவர் இந்த வாதத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணை நேற்று (ஏப்ரல் 15ந்தேதி)  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்துப் பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்த், மத விவகாரங்களில் கோடிக்கணக்கான மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் தவறானவை அல்லது பிழையானவை என்று ஒரு நீதிமன்றம் பிரகடனம் செய்வது மிகவும் சவாலான விஷயம்.

சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு மதத்தின் அடிப்படை அல்லது சாரமான நடைமுறைகளை அகற்றிவிட முடியாது” எனத் தெரிவித்தார்.

மற்றொரு நீதிபதியான நாகரத்னா, சமூக நலம் மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு மதத்தின் உள்ளடக்கத்தை நாம் வெறுமையாக்க முடியாது. எனத் தெரிவித்ததுடன் ஒரு விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத நபர்கள் தாக்கல் செய்யும் பொதுநல மனுக்களை மத விவகாரங்களில் அனுமதிப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து, சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “அத்தியாவசிய மத நடைமுறை” என்ற கோட்பாட்டை நீதிமன்றங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும், நீதிபதிகள் ஒரு மதத்தில் எது அத்தியாவசியம் எது அத்தியாவசியம் இல்லை என்று முடிவு செய்வது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு என்பது பாலினப் பாகுபாடு அல்ல, அது அங்குள்ள ஐயப்ப சுவாமியின் ‘நித்ய பிரம்மச்சாரி’ என்ற தனித்துவமான அடையாளத்துடன் தொடர்புடையது என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பான, விசாரணை நாளையும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது.

சபரிமலை தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி பி.வி. நாகரத்னா, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, நீதிபதி அரவிந்த் குமார், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், நீதிபதி பிரசன்னா பி. வரலே, நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன் இந்த வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஏப்ரல் 15ந்தேதி நடைபெற்ற  விசாரணையின் நான்காவது நாளாகும்.  விசாரணையின்போது,, அரசியலமைப்புச் சட்டத்தின் 25(2)(b) மற்றும் 26(b) ஆகிய பிரிவுகள் குறித்த ‘நாயர் சர்வீஸ் சொசைட்டி’யின் வாதத்தை ‘திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம்’ மறுத்துள்ளது. சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மதத்தின் சாரத்தை நீர்த்துப்போகச் செய்ய இயலாது என்று உச்ச நீதிமன்றம் விசாரணையின்போது கருத்து தெரிவித்துள்ளது.

இது, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது என உச்ச நீதிமன்றம் விசாரணையின்போது குறிப்பிட்டுள்ளது  கருத்தரிக்கும் நிலையில் உள்ள பெண்கள் கோவிலுக்குச் செல்வது, அத்தெய்வத்தின் தனித்துவமான அடையாளத்திற்கு முரணானது; அவர்கள் மற்ற ஐயப்பன் கோவில்களுக்குச் செல்லலாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]