சென்னை

கட்டட திட்டங்களுக்கான அனுமதியை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பித்தால் போதும் என்ற தமிழ அரசின் முடிவு  தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு நகர மற்றும் கிராமப்புற திட்டங்கள் 1971 ம் ஆண்டு சட்டத்தின் மீதான திருத்தம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்,  தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், வணிக வளாகங்கள், நகரவடிவமைப்பு போன்ற பெரும் திட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் முடிப்பது இயலாத ஒன்றாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், 1971 ம் ஆண்டில்தமிழகத்தில் பெரிய திட்டங்கள் எதுவும் செயல்வடிவம் பெறவில்லை என்பதால் திட்டம் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கவேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், இனி கட்டட திட்டங்களுக்கான அனுமதியை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பித்தால் போதும் என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு ரியல் எஸ்டேட் அதிபர்களின்  வரவேற்பை பெற்றுள்ளது. கட்டடம் கட்டுவதற்காக வங்கிகளில் நிதி பெறுவது மூன்றாண்டுகளுக்கு மேல் தாமதமாகிறது.  இப்போது 5 ஆண்டுகள்வரை நீட்டித்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருவதாக பில்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளன.