சென்னை: தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்காக பகலிலும் பேருந்துகளை இயக்க தயார் என ஆம்னி பேருந்துகள்  உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு 12மணி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஆளும் கட்சி தொழிற்சங்கமான,  தொ.மு.ச.,  காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி போன்ற தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று அறிவித்து உள்ளது. அதனால், திமுக அரசு, அவர்களைக்கொண்டு  மக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால், இன்று முதல்நாள் வேலை நிறுத்த்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகள் இயங்ஙகப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  நாங்கள் பேருந்துகளைஇயக்க தயாராக இருக்கிறோம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளத. இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “தமிழகத்துக்குள் தினசரி 2,800, ஆம்னி பேருந்துகள் மூலம் 3,600 சர்வீஸ்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதில், பெரும்பாலும் 80 சதவீத ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் தேவைக்கு ஏற்றார்போல் அதிகமான சர்வீஸ் இயக்கப்படும்.

இந்த சூழ்நிலையில் அரசு கோரிக்கை வைத்தால், பயணிகளின் நலன் கருதி, இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் எங்களது ஆம்னி பேருந்துகளை, பகல் நேரங்களில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.