டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி காலம் மேலும் 3ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
சக்திகாந்த தாஸின் பதவி காலம் ‘வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ‘10.12.2021ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில், சக்திகாந்த தாஸை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராகத் தற்போதுள்ள சக்தி காந்த தாஸ், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக (RBI Governor) 2018 ஆம் ஆண்டும் முதல் பணியாற்றி வருகிறார். முன்னதாக அவர் பொருளாதார விவகாரச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர்,  உட்பட இந்திய ஆட்சிப் பணியில் மத்திய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். மேலும், பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், G20 கூட்டமைப்பில், இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். தற்போது அவரது பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளது.

 சக்தி காந்த தாஸ் (Shaktikanta Das)  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.