சென்னை: திருமணத்திற்காக ரேமண்ட் ஷோரூமில் வாங்கிய கோட், திருமண நாளிலேயே கிழிந்துவிட்டதால், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.80,000 இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ரேமண்ட் சில்லறை வர்த்தக ஷோரூமில், தனது திருமணத்திற்காக, கடந்த 2016ம் ஆண்டு கோட் துணி வாங்கி, அங்கேயே தைத்தார் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சுப்பிரமணி.

அதன் மொத்த மதிப்பு ரூ.12,308. அந்த கோட் துணி மிகவும் தரம் வாய்ந்ததென்றும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு உழைக்குமென்றும் கடையின் சார்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால், திருமண நாளன்றே, கை பகுதியில் அந்த கோட் கிழிந்துவிட்டது.

இதனால், அவமானமும் மனஉளைச்சலும் அடைந்த சுப்பிரமணி, நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், பாதிக்கப்பட்ட சுப்பிரமணிக்கு, அந்த ரேமண்ட் ஷோரூம் மற்றும் ரேமண்ட் நிறுவனம் ஆகியவை இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ, ரூ.80,000 அபராதத் தொகையாக வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது.

– மதுரை மாயாண்டி