வட இந்தியாவில் பிரபலமான பூரி ஜெகநாதர் தேரோட்டத்தில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தேரோட்டம் நடைபெறும் ஜூலை 11 ம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை 13 ஆம் தேதி காலை 8 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையுடன் கூடிய திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஒடிசாவின் கடலோர மாவட்டத்தில் வருடம்தோறும் நடைபெறும் ரத யாத்திரையில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். இந்த மத நிகழ்வு 10 முதல் 12 நாட்கள் வரை நடைபெறும். கடந்த ஆண்டு (2020) ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் ரத யாத்திரையை கட்டுப்பாடுகளுடன் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு மாநில அரசே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேரோட்டத்தில் கலந்துகொள்ள மட்டும் 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஜூலை 12ந்தேதி ரத ஜாத்ரா (யாத்திரை) நடைபெற உள்ளதால், ஜூலை 11 ஆம் தேதி இரவு 8 மணிக்கு முதல், ஜூலை 13 ஆம் தேதி காலை 8 மணி ஊரடங்கு விதிக்கப்படுவதாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய சப்-கலெக்டர் பபடரன் சாஹூ, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பூரி நகரத்துக்கான அனைத்து நுழைவு வாசல்களும் சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுபோல, பக்தர்கள் கோவில் சன்னதிக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
திருவிழாவின் போது பூரிக்கு வருகை தர வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ரத ஜாத்ராவின் நேரடி ஒளிபரப்பை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் என்றும் மாநில அரசு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.