உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு தங்களுக்கு வழங்கிய காசோலையை ஏற்க மறுத்துள்ளனர்.

சில்க்யரா பகுதியில் உள்ள மலையைக் குடைந்து 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வந்த சுரங்கவழி பாதையில் கடந்த நவம்பர் மாதம் 12 ம் தேதி அதிகாலை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுரங்கப்பாதை உள்வாங்கியது.

இந்த விபத்தின்போது அங்கு பணியாற்றிய 41 பேர் சுரங்கத்துக்குள் சிக்கினர், இவர்களைக் காப்பாற்ற பல கட்ட முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்பம் ஆகியவை தோல்வி அடைந்தது.

மத்திய மற்றும் மாநில அரசு பேரிடர் குழு அதிகாரிகள் அனைவரும் அங்கு முகாமிட்ட நிலையில் 17 நாட்கள் கழித்து நவம்பர் 28ம் தேதி அவர்கள் மீட்கப்பட்டனர்.

இதில் கடைசி முயற்சியாக 15 மீட்டர் நீளத்திற்கு எலி துளை சுரங்க தொழிலாளர்களின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கையே அந்த 41 பேரும் உயிருடன் மீட்கப்பட காரணமாக இருந்தது.

எலி துளை சுரங்கப் பணியை மேற்கொள்ள டெல்லியைச் சேர்ந்த ராக்வெல் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அறிவியல்பூர்வமான முறையல்ல என்றும் மிகவும் ஆபத்தானது என்றும் கூறி கைவிடப்பட்ட இந்த எலி துளை சுரங்கம் தோண்டும் பணியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 41 பேரின் உயிரை மீட்ட இந்த பணியாளர்களுக்கு ரூ. 50,000க்கான காசோலையை உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வழங்கினார்.

சுரங்கப்பணியின் போது உள்ளே சிக்கிக் கொண்டு தவித்த தொழிலாளர்கள் உயிருடன் வெளியே வந்த நிலையில் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த 41 உயிர்களை மீட்ட தங்களுக்கு 50000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி அப்போதே அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும், எலி துளை சுரங்கப் பணி கைவிடப்பட்டதால் தங்களுக்கு உரிய மாற்று வேலைகளை வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். தவிர, நவீன தொழில்நுட்பங்கள் உதவாத நிலையில் மனித உழைப்பின் மூலமே சுரங்கத்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குமுறிவருகின்றனர்.

இவர்களின் கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய மாநில அரசு இதுவரை அவர்களின் கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்காததை அடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலையை பணமாக்கப்போவதில்லை என்றும் அதனை மாநில அரசிடமே திரும்ப வழங்க இருப்பதாகக் கூறியுள்ளனர்.