தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார்.

1957 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேந்திரன் 1988ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். பின்னர் 1999 முதல் 2004 வரை ஒடிசா மாநில ஆளுநராகவும் பொறுப்பு வகித்தார்.

88 வயதான எம்.எம். ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இவருக்கு சுசீலா ராஜேந்திரன் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்

இவரது மறைவு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் “தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளரான எம்.எம். ராஜேந்திரன், 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரான பின்னும் அப்பதவியில் தொடர்ந்து நீடித்துப் பணியாற்றினார்.

அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்புப் பதவிகளிலும் சிறப்பாகவும் நிர்வாகத் திறனோடும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டவர் ராஜேந்திரன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும். உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.