திருப்பாவை – பாடல் 8  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 8 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 8.

திருப்பாவை பாடல் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

 பொருள்:

 மகிழ்ச்சியை மட்டும் சொந்தமாக கொண்ட அழகானவளே, கிழக்கில் சூரியன் உதித்து எருமைகள் மேய்ச்சலுக்கு மேய சென்றுவிட்டது. எல்லா பெண்களும் நீராடுவதற்காக வந்துவிட்டனர். அவர்கள் விரைவாக குளிக்கசெல்ல அவசரப்படுகிறார்கள். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்தி, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம்.

கேசி என்ற அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிழந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனான கிருஷ்ணர் நாம் வணங்கினால், ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே உடனே கிளம்பு.