மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சி நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையின் ஆசிரியராக, அக்கட்சியின் தலைவரும், மராட்டிய முதல்வருமான உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு, சாம்னா பத்திரிகையின் ஆசிரியராக செயல்பட்டு வந்தார் உத்தவ் தாக்கரே. ஆனால், தற்போது அவர் மாநில முதல்வராகப் பதவியேற்று விட்டதால், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிர்வாக ஆசிரியராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், சாம்னா ஆசிரியராக, முதல்வர் உத்தவ்வின் மனைவி ராஷ்மி செயல்படுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம், சஞ்சய் ராவத்தின் பணிகள் பாதிக்காமல் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது, சஞ்சய் ராவத்தின் முக்கியத்துவத்தைக் கட்சியில் குறைக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற தகவல்கள் பரவுகின்றன. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மிக்கு தற்போது 54 வயதாகிறது.