வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் பற்றிய சில அரிய தகவல்கள்

வேலூர் மாநகரின் மையப் பகுதியில் 136 ஏக்கர் பரப்பளவில் அகழியுடன் அமைந்துள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் ஆலயம்.
ஸ்தல வரலாறு :-
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசிஷ்டர், அகஸ்தியர், கௌதமர், பரத்வாஜர், வால்மீகி, காசியபர் அத்ரியார் ஆகிய சப்தரிஷிகள் வேலூருக்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பகவதி மலையில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தனர். பின்னர் அத்திரியர் மட்டும் வேலூரில் வழிபட்டு வந்தார். இறுதியில் அவரும் சென்றுவிட, சிவலிங்கம் கவனிப்பார் இன்றி புற்றால் மூடப்பட்டது.
கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள பத்ராசலம் என்ற ஊரில் எத்தம ரெட்டிக்குப் பிறந்த மகன்கள் பொம்மிரெட்டி, திம்மி ரெட்டி ஆகியோர், சோழ வம்ச அரசரிடம் தானமாகப் பெற்ற வேலப்பாடி பகுதியில் குடியேறினர். அடர்த்தியான வனப் பகுதியின் புற்றிலிருந்த 5 தலை நாகம், 5 காம்புகள் கொண்ட பசுவின் மடியிலிருந்து தினசரி பால் குடிப்பதை அறிந்த பொம்மி, அங்கேயே படுத்துறங்கினார். அப்போது கனவில் தோன்றிய சிவபெருமான், தான் அங்கிருப்பதை உணர்த்தினார்.
அதையடுத்து சிவபெருமானுக்கு 1193-ம் ஆண்டு பங்குனி 19-ம் தேதி கோயில் கட்டும் பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. பள்ளிகொண்டராயமலையில் இருந்து யானைகள் மூலம் கற்கள் கொண்டு வரப்பட்டன.
கோயில் கட்டுமானப் பணி தொடங்கிய நேரம் சரியில்லை என்பதால், கோயிலைச் சுற்றி அகழியோடு கூடிய கோட்டையை கட்ட முடிவு செய்யப்பட்டது.
கோட்டையையும், கோயிலையும் கட்டிய பொம்மி, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, “ஸ்ரீஜ்வரகண்டேஸ்வரர்’ எனப் பெயரிட்டார். தனி சன்னதி அமைத்து அம்பாளுக்கு “ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி’ என பெயரிட்டார்.
கோயிலைச் சுற்றியிருந்த வேலமரங்களை அழித்து, நகரை உருவாக்கினார். அதனால், இந்நகருக்கு “வேலை ஊர்” எனப் பெயரிட்டார். காலப்போக்கில் அது வேலூர் எனப் பெயர் மருவியது.
விஜயநகரப் பேரரசரான சதாசிவ தேவ மஹாராயரால் கிபி.1542-1565 வரை இக்கோயிலின் மதில்கள், கோபுரங்கள், திருமண மண்டபங்கள் முதலானவை கட்டப்பட்டன.
கிபி.1612-ல் மொகலாயர்கள் ஆட்சி ஏற்பட்டதும், பீஜப்பூர் சுல்தான்கள், முஹமது கான் ஆகியோர் ஆட்சியில் கோயிலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
முஹமது கானுக்குப் பின் வந்த அப்துல்லா, சிவலிங்கத்தைக் கோட்டையின் அகழிக்குள் வீசினார். பின்னர் மராட்டிய மன்னர் துக்கோஜி ராவ், மீண்டும் சிவலிங்கத்தை ப்ரதிஷ்டை செய்தார்.
அதுமுதல், நீரில் குடியிருந்த ஈஸ்வரன் எனப் பொருள்படும்படி “ஜலகண்டேஸ்வரர்” என ஸ்வாமி அழைக்கப்பட்டார்.
18-ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் மீண்டும் மொகலாயர்கள் படையெடுப்பின்போது, சிவலிங்கம் சேதப்படுத்தப்படும் என அஞ்சிய இந்து வீரர்கள், ஜலகண்டேஸ்வரரைப் பெயர்த்து எடுத்து, வேலூர் அடுத்துள்ள சத்துவாச்சாரிக்குக் கொண்டு சென்றனர். 200 ஆண்டுகளாக “கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் லிங்கம்” என்ற பெயரிலேயே சத்துவாச்சாரியில் அச்சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு வேலூர் கோட்டை வந்தபோது கோயில் கருவறை மண்டபத்துள் எந்த சிலைகளும் இல்லை. கோயிலில் மீண்டும் சிலைகளை வைத்து வழிபட இந்து சமயத்தினர் 1928-ம் ஆண்டு முயற்சி எடுத்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி, சத்துவாச்சாரியில் இருந்த சிவலிங்கம் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுமுதல் கோயிலில் நித்திய கால பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஸ்தல மூர்த்திகள் :-
ஶ்ரீஜலகண்டேஸ்வரர், ஶ்ரீஅகிலாண்டேஸ்வரி.
ஸ்தலவ்ருக்ஷம் :- வன்னி மரம் :-
வழிபாடு :- சைவ வழிபாட்டு முறை
 
தினசரி பூஜைகள் :-
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு.
காலை 7: பஞ்சமூர்த்தி அபிஷேகம்.
பகல் 11.30: கோ-பூஜை.
பகல் 12: உச்சிகால அபிஷேகம்.
பகல் 1: நடை அடைப்பு.
பகல் 3: நடை திறப்பு.
மாலை 4: பஞ்சமூர்த்தி அபிஷேகம்.
இரவு 8.30: நடை அடைப்பு.
திருவிழாக்கள் : –
மாதம்தோறும் வளர்பிறை, தேய்பிறை பிரதோஷ வழிபாடு. சங்கடஹரசதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி விழாக்கள், பெüர்ணமி சிறப்பு அபிஷேகம். ஆண்டுதோறும் ஸ்ரீநடராஜருக்கு 6 அபிஷேகங்கள், 63 நாயன்மார்களுக்குக் குருபூஜை விழா. மார்ச் ல் ஜலகண்டேஸ்வரர் பெருவிழா. ஆடிப்பெருக்கு கங்கா பாலாற்றீசுவரர் ஆண்டு விழா. ஆடிக் கிருத்திகை பெருவிழா-சிறப்பு அலங்காரம். கார்த்திகை தீபம்.
போக்குவரத்து வசதிகள் :-
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில், வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே கோயில் அமைந்துள்ளது.
காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது.
அருகில் உள்ள கோயில்கள் :-
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் சேண்பாக்கம் விநாயகர் கோயில் உள்ளது.
10 கி.மீ. தொலைவில் ஸ்ரீபுரம் பொற்கோயில் அமைந்துள்ளது.