சென்னையில் நடைபெறும் 2022 ம் ஆண்டின் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த எட்டு வயது வீராங்கனை ராண்டா செடார், உலகின் இளம் செஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாலஸ்தீனத்தில் உள்ள ஹெப்ரானைச் சேர்ந்தவரான ராண்டா செடாருக்கு ஐந்து வயதில் இருந்தே அவரது தந்தை செஸ் விளையாட கற்றுக்கொடுத்துள்ளார்.

சில நாட்களில் அதுவே அவரது வாழ்க்கையாக மாறியது, பல போட்டிகளில் பங்கேற்றுள்ள ராண்டா பாலஸ்தீன பெண்கள் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் செஸ் ஒலிம்பியாட் அணிக்கு தகுதி பெற்றார்.

சதுரங்க விளையாட்டில் பெண் கிராண்ட் மாஸ்டராக ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் காய்நகர்த்தி வரும் ராண்டா-வுக்கு, 26 ஆண்டுகள் உலகின் நெம்பர் 1 செஸ் வீராங்கனையாக விளங்கிய ஹங்கேரியைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜூடிட் போல்கரை இந்தியாவில் நடைபெறும் போட்டியின் போது சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.