பாகிஸ்தான் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் காப்பாளருமான இம்ரான் கான் வாரியத்தின் தலைவராகத் தன்னை தேர்வு செய்துள்ளதாக ரமீஸ் ராஜா கூறியிருக்கிறார்.

பி.சி.பி.யின் தற்போதைய தலைவராக இருக்கும் இஷான் மனி-யின் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற பின் 2018 ம் ஆண்டு இஷான் மனி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி.) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மேலும் மூன்றாண்டுகள் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரமீஸ் ராஜா மற்றும் இஷான் மனி ஆகிய இருவரையும் பிரதமர் இம்ரான் கான் அழைத்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து தலைவர் பதவிக்குத் தன்னை தேர்வு செய்திருப்பதாக அறிவித்திருக்கும் ரமீஸ் ராஜா இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறினார்.

மேலும், அறிவிப்பு வெளியானதும் வாரிய தலைவருக்கான தேர்தலில் முறையாக போட்டியிடப் போவதாக கூறியுள்ளார்.

2017 ம் ஆண்டு சாம்பியன் டிராபி கோப்பையை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதன் பின் சர்வதேச அளவில் எந்த ஒரு போட்டியிலும் சோபிக்கவில்லை என்ற நிலையில் ரமீஸ் ராஜா-வின் தேர்வு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்படுகிறது.

1992 ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றவர் ரமீஸ் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.