ராமேஸ்வரம்: பருவநிலை மாற்றங்களைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி உள்ளது. இதனால், இன்று வைகாசி அமாவாசையையொட்டி கடலில் நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு கடல் நீர் பக்தர்கள் நீராட முடியாதவாறு உள்வாங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைகாசி அமாவாசை நாளில் ராமேஸ்வரத்திற்கு புனித நீராட சென்ற பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குவிந்துள்ளனர். ஆனால், அங்குள்ள கடல் வெகுதூரம் உள்வாங்கி இருப்பது, அங்கு வந்த பக்தர்களிடையே  அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் பலர் அங்குள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து கோயிலின் உள்ளே உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு கருதி கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக ஒருசில பகுதிகளில் கடல்நீர் உள்வாங்குவதும், கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவிள்ள சூற்றுச்சூழல் ஆய்வாளர்கள், பருவநிலை மாற்றத்தால்  கடல் நீண்ட தூரம் உள்வாங்கி இருப்பதாகவும், இதனால் ராமேஸ்வரம் அருகே உள்ள  ஒலைக்குடா முதல் சேராங்கோட்டை வரை கரையோர கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. மதியம் கடல் பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும் தெரிவித்து உள்ளனர்.