சென்னை

ண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பா மீது பாமக தலைவர் ராமதாஸ் குற்றச் சாட்டுக்கள் கூறி உள்ளர்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.   பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமதாஸ் தனது அறிக்கையில், ”சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கக் கூடாது என பாமக வலியுறுத்தியும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அந்த நியமனம் திரும்பப் பெற வேண்டும்.   நேற்று நடந்து முடிந்த நேர்காணலில் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று முன் தினமே சூரப்பா தெரிவித்துள்ளார்.   தகுதி அடிப்படையில் நேர்காணலில் சூரப்பா தேர்ந்தெடுக்க பட்டிருந்தால் அதற்கு முன்பே அவர் அதை எவ்வாறு உறுதி செய்தார்?

 

சூரப்பா

கர்நாடக மாநிலத்தவரான சூரப்பாவை துணை வேந்தராக நியமிக்கப்படக்கூடாது என பாமக பலமுறை கூறியும் அவர் நியமிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   அவரைப் பற்றி அந்த அறிக்கையில் புகழ் பாடப்பட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.   ஆளுநர் மாளிகை அறிக்கையில் உள்ளது போல் சூரப்பா ஒரு நல்ல நிர்வாகி அல்ல.  பஞ்சாப் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த போது அவருக்கு மத்திய அரசு பணி நீட்டிப்பு வழஙகவில்லை.

இவர் மீது ஐந்து குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  அவை :

1.       இந்திய தொழில்நுடபக் கல்வி இயக்குனராக பணி புரிந்த போது இவர் பெரும்பாலான நாட்களில் பணிக்கு வரவில்லை

2.       நிர்வாகம் சார்ந்த எந்த ஒரு முடிவையும் விரைந்து எடுக்கவில்லை

3.       பஞ்சாப் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 750 கோடி யை பயன்படுத்தவில்லை.   அதனால் கட்டுமானச் செலவு ரூ.1958 கோடியாக உயர்ந்ததாக கணக்கு தணிக்கை நிறுவனம் குற்றம் சாட்டியது.

4.       வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புக்களை தனது ஆராய்ச்சி முடிவு என தவறாக கூறியது.

5.       தனக்குக் கீழ் பணி புரியும் பேராசிரியரகளை இவர் மரியாதைக் குறைவாக நடத்தியது.

இவ்வளவு குற்றசாட்டுக்கள் உள்ள தமிழரல்லாத ஒருவரை தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக எவ்வாறு நியமிக்கலாம்?   இசைப் பல்கலைக் கழகத்துக்கு கேரள பெண்மனி, சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திரர், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கன்னட மாநிலத்தவர் என்பது தமிழ் கல்வியாளர்களை அவமானப் படுத்தும் செயலாகும்.

இதே போல சூரப்பாவை விட அதிக தகுதி உள்ள 25 பேராசிரியர்கள் பட்டியலை பாமக அளிக்கத் தயார்.  அவர்களில் ஒருவரையாவது கர்நாடகப் பல்கலைக் கழகம் ஏதாவது ஒன்றில் பணி அமர்த்த தமிழக ஆளுநர் தயாரா?    அப்படி முடியவில்லை எனில் கர்நாடகாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்திலாவது தமிழ்நாட்டு பேராசிரியர் ஒருவரை துணை வேந்தர் ஆக்க தமிழக ஆளுநர் முயல்வாரா?” என ராமதாஸ் தனது அறிக்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.