சென்னை:

சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி,  நேச்சுரோபதி போன்ற மருத்துவ படிப்பில் சேரவும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், திமுகவும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய அதிகார குவியலுக்கான வேட்டையாக சித்தா ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

கிராமப்புற வளர்ச்சியில் அக்கறை இருந்தால், ஆயுஷ்க்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கிராமப்புற சுகாதார தேவைகளுக்காக எஞ்சியிருக்கும் சித்தா உள்ளிட்ட படிப்புகளின் மீது கை வைப்பது ஏதோச்சதிகாரம்.

கிராமப்புற மக்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கு என்ன என்ற பா.ஜ,வின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பபட்டுள்ளது.