ராமர் கோயில் திறப்புவிழா கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில் நாளை மருத்துவ அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 1200க்கும் மேற்பட்ட நோயாளிகள் திண்டாட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் நாளை பிற்பகல் 2:30 மணிக்கு மேல் திறந்தால் போதும் என்று அறிவித்துள்ளது.
இதனை அடுத்து டெல்லியில் உள்ள நான்கு மத்திய அரசு மருத்துவமனைகளும் காலை அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
எய்ம்ஸ், ராம்மனோகர் லோகியா, லேடி ஹார்டிங்கே மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளில் நாளை காலை புறநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் முதல் நாளான திங்களன்று காலை நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் டெல்லியின் முக்கிய மருத்துவமனைகளின் இந்த அறிவிப்பு நோயாளிகளை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
பெரும்பாலான மருத்துவ பிரிவுகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் காலையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் நிலையில் ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்களன்று காலையும் மருத்துவர்கள் வரமாட்டார்கள் என்ற அறிவிப்பால் டெல்லி மக்கள் பெரிதும் கலங்கிப்போயுள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை மற்றும் பொதுவிடுமுறை தவிர வருடத்தின் அனைத்து நாட்களும் வேலை செய்யும் இந்த நான்கு மருத்துவமனையில் பொதுவாக நாளொன்றுக்கு 32,000 புறநோயாளிகளும் 1275 அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது இந்த மருத்துவமனையின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
இந்த நிலையில் டெல்லி மட்டுமன்றி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவமனைகள் நாளை இயங்காது என்ற அறிவிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக காத்திருக்கும் மற்ற மாநில மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் திண்டாடக்கூடும் என்று கூறப்படுகிறது.
வளர்ச்சி அடைந்த நாகரீகமான சமுதாயத்தில் இதுபோன்ற காரணங்களுக்காக மருத்துவமனைகளுக்கு விடுமுறை வழங்குவது என்பது மிகவும் வேதனையளிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் : மருத்துவ சேவை முதல் வேறு என்னென்ன சேவைகள் நாளை ஸ்தம்பிக்கும் ?