ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட ராமர் கோயில்கள், அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்கள் மற்றும் தனியார்வசம் உள்ள கோயில்கள் அனைத்திலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விஷேச பூஜைகள், அன்னதானம் மற்றும் பந்தல் அலங்காரங்களை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை மறுத்துள்ள தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பும் நோக்கில் செயல்படுவதாகவும் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவர் இதுபோன்று திட்டமிட்டு வதந்தி பரப்பும் நோக்கில் செயல்படுவது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராமர் கோயில் திறப்பு விழா முன்னிட்டு எந்தவொரு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்திற்கும் தமிழக அரசு தடைவிதிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், உயர்பதவியில் இருக்கக்கூடியவர், பல துறைகளில் அமைச்சராக நீண்டகாலம் பணியாற்றியவர், மக்களவை தேர்தலில் நின்று மக்கள் செல்வாக்கில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவர், வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு நேற்று முளைத்த காளான் போல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மீது அவதூறு பரப்புவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தவிர, கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் ஆகம விதிகளுக்குப் புறம்பாகவும் பக்தர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் பாஜக கட்சியினர் என்று அந்தப் பகுதி மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.