டெல்லி,

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஆஜராக மறுத்துள்ள கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு, முன்னாள் பார் கவுன்சில் தலைவராகவும் மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்த ராம் ஜெத்மலானி அறிவுரை கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்புள்ள நீதிபதி கர்ணன் அவர்களுக்கு,

நான் இதற்கு முன் உங்களை சந்தித்தது இல்லை. உங்கள் பெயரைகூட கேள்விப்படவில்லை. ஆனால் இன்று உங்கள் நடவடிக்கையால் இந்தியாவுக்கு வெளியிலும் உங்கள் பெயர் தெரிந்துவிட்டது. உங்களுக்குப் புத்திபேதலித்துவிட்டதாக கருதுகிறேன். இதைச் சொல்ல வருத்தப்படுகிறேன். மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான், நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் திரும்ப பெற வேண்டும்.

இதேபோல் கடந்த காலங்களில் உங்களது முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கும் நீங்கள் பணிவன்புடன் மன்னிப்புக் கேட்கவேண்டும். உங்கள் முட்டாள்தனத்தை நீங்கள் உணரவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் நான் விளக்குகிறேன். 

ஊழல் மலிந்த இந்தியாவில் அதை தடுக்க நீதித்துறையால் மட்டுமே முடியும். அதை அழிக்கவோ அல்லது பலவீனப்படுத்தவோ வேண்டாம். வழக்கறிஞர் என்ற முறையில் பின்தங்கிய வகுப்பினருக்காக நான்பணியாற்றியிருக்கிறேன். அவர்கள்மீது எனக்கு மிகுந்த அனுதாபம் உள்ளது.

ஆனால் நீங்கள் அவர்களது நலனில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். தேசத்துக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாது எண்ணற்ற விசயங்களுக்காக பாடுபட்ட எனது உணர்வுபூர்வமான அறிவுரையை தயவுசெய்து கேளுங்கள்.

இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நீதிபதி கர்ணனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.