மாநிலங்களவை காவலர் சீருடை : உறுப்பினர்கள் எதிர்ப்பால் மாற்றி அமைக்கப் பரிசீலனை

Must read

டில்லி

ராணுவ உடை போன்று மாநிலங்களவை காவலர்களுக்குச் சீருடை வழங்கப்பட்டதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு எழுந்ததால் இது குறித்து மறு பரிசீலனை நடைபெற உள்ளது.

நேற்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது.  வழக்கமாக  மாநிலங்களவைத் தலைவருக்கு அருகே நிற்கும் மார்ஷல்கள் எனப்படும் காவலர்கள் இந்தியப் பாரம்பரிய படி குர்தா உடையிலும், தலையில் தலைப்பாகையும் கட்டி இருப்பார்கள்.  நீண்டகாலமாக இது அவர்களின் சீருடையாக இருந்து வந்தது.

நேற்று கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் எந்தவிதமான அறிவிப்பும் இன்றி மார்ஷல்கள் சீருடை மாற்றப்பட்டு, ராணுவப் பச்சை (ஆலிவ் கிரீன்) நிறத்தில் ராணுவ உடை போன்று சீருடையும், தலையில் தொப்பியும் வழங்கப்பட்டிருந்தது.   இவ்வாறு சீருடை மாற்றப்பட்டு இருந்தது குறித்து உறுப்பினர்கள் அனைவரும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அதிருப்தி தெரிவித்தனர். ஒரு  சிலர் ராணுவ உடை தோற்றத்தில் காவலர்கள் இருப்பதைப் பார்த்து விமர்சித்துள்ளார்கள்.

இந்த சீருடை ராணுவ உடை போன்ற தோற்றத்தில் அளிக்கப்பட்டதை முன்னாள் ராணுவத் தலைவர் வி.வி.மாலிக் உள்ளிட்ட பலரும் மாநிலங்களவை மார்ஷல்களுக்கு விமர்சித்துள்ளார்கள்.   தனது டிவிட்டரில் வி.பி.மாலிக் “ராணுவப் பிரிவில் இல்லாதவர்கள் ராணுவ உடை போன்ற தோற்றத்தில் ஆடையை அணிவது சட்டவிரோதம், பாதுகாப்புக்கு ஆபத்தானது.  இதை மாநிலங்களவைச் செயலாளர், மாநிலங்களவைத் தலைவர், ராஜ்நாத் சிங் ஆகியோர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

மாலிக்கின் இந்த  விமர்சனத்தை மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.  நேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் வெங்கய்ய நாயுடுவிடம் இது குறித்துப் பேசுகையில், ”மார்ஷல்களுக்கு ராணுவத் தோற்றத்தில் சீருடை வழங்கியதன் மூலம், அவையில் ராணுவச் சட்டத்தைப் புகுத்தும் திட்டமா” எனக் கேட்டார்.  வெங்கய்ய நாயுடு, “முக்கியமான நேரத்தில் இதுபோன்ற முக்கியமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்’’ எனக் கண்டித்தார்.

துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு இன்று அவையில் கூறுகையில், “மார்ஷல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய சீருடை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், ஆலோசனைகளும், கருத்துகளும் அரசியல் கட்சிகளில் இருந்தும், முக்கியமான நபர்களிடம் இருந்தும் வந்துள்ளன. ஆதலால் சீருடையை மறுபரிசீலனை செய்யச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

More articles

Latest article