பாஜகவின் ஆணவ அரசியல் முடிய போகிறது! கட்சி நாளிதழில் கடும் எச்சரிக்கை விடுத்த சிவசேனா

Must read

மும்பை: பாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை, அதன் ஆணவ அரசியல் முடிய போகிறது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், அதன் பிறகு கூட்டணியில் ஏற்பட்ட அதிகார பகிர்வு ஆகியவற்றின் விளைவாக பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. அதை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


தற்போது மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் அரசு அமைக்க சிவசேனா முடிவு செய்திருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்பிக்களுக்கான இருக்கைகளும் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டன. அதன் காரணமாக பாஜக, சிவசேனா இடையே விரிசல் அதிகமானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவை காய்ச்சி எடுத்திருக்கிறது சிவசேனா. பாஜகவுடன் ஒரு காலத்தில் எங்களை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறது.


அந்த விமர்சனத்தில் சிவசேனா மேலும் தெரிவித்து இருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி உருவான போது, இப்போது பதவியில் இருந்த பல தலைவர்கள் அப்போது இல்லை. இன்னும் சிலர் பிறந்திருக்கவே இல்லை.
யாரும் பாஜகவுடன் கூட்டணிக்கு வைக்க விரும்பாத போது, வராத போது வந்த ஒரே கட்சி சிவசேனா மட்டுமே. காரணம் இந்துத்துவா என்பதை பல கட்சிகள் ஏற்க மறுத்தன.


பாஜகவின் ஆணவ அரசியல் முடிய போகிறது என்பதற்கான ஆரம்பம் தான் இது. எங்களுக்கு சவால் விடுத்த உங்களை (பாஜக) ஒருநாள் அகற்றுவோம்.தேசிய ஜனநாயக கூட்டணி உருவானபோது, அதன் தலைவர்களாக ஜார்ஜ் பெர்ணான்டசும், அத்வானியும் இருந்தனர்.

முக்கிய முடிவுகளை அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி எடுத்தனர். இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் யார்? மோடியை விமர்சித்த பிஜு ஜனதாதளம் பாஜகவுடன் இணைந்த போது யாரும் எங்களை கேட்கவில்லையே?

அனைவரும் பாஜகவை எதிர்த்த போது, சிவசேனா பாஜகவுக்கு ஆதரவாக நின்றது.
ஆனால், பால் தாக்கரேவின் நினைவு தினத்தன்று கூட்டணியில் இருந்து தூக்கி எறியப்படுகிறோம். இது பல விளைவுகளை ஏற்படுத்தும் என்று கடுமையாக சிவசேனா எச்சரித்து இருக்கிறது.

More articles

Latest article