டெல்லி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64) அமோக வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராஜ்யசபாவின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் 2022க்கான தேர்தல் அதிகாரியுமான பி.சி. மோடி, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை வழங்கினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திரவுபதி முர்மு நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், 2-வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவடல வரும் 25-ம் தேதி அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கிறார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரான பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார்.  எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் பாஜக அமைச்சரும், பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான,   யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினார்.

கடந்த 18ந்தேதி நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேசிய மற்றும் மாநில கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்சகள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 771 எம்.பி.க்களும், 4,025 எம்எல்ஏ.க்களும் வாக்களித்தனர். ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கிடையில்,   எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததால், மம்தா, சிவனோ கட்சி உள்பட பல கூட்டணி கட்சிகள் முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்தன.

தேர்தல் வாக்குகள் அனைத்தும் நேற்று (21ந்தேதிஸ்ர)  டெல்லியில் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் எம்.பி.க்களின் வாக்குகளும், தொடர்ந்து எம்எல்ஏ.க்கள் வாக்குகளும் எண்ணப்பட்டன. இறுதியில், திரவுபதி முர்முவுக்கு ஒட்டுமொத்தமாக 2,824 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அவருக்கு 6,76,803 வாக்கு மதிப்பு கிடைத்தது. முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1,877 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அவருக்கு 3,80,177 வாக்கு மதிப்பு கிடைத்தது. சின்ஹா 36 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வ அடைந்துள்ளார்.

இதையடுத்து, குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற முர்முவுக்கு, ராஜ்யசபாவின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் 2022க்கான தேர்தல் அதிகாரியுமான பி.சி. மோடி, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை வழங்கினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி  வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,, “புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். எம்எல்ஏவாக, அமைச்சராக, ஆளுநராக அவர் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். இதேபோல, மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக அவர் நாட்டை வழிநடத்துவார். 130 கோடி இந்தியர்களும் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உருவெடுத்துள்ளார். இந்தியா புதிய வரலாறை எழுதுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து திரவுபதி முர்முவை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உடனிருந்தார்.

யஷ்வந்த் சின்ஹா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசமைப்புச் சாசனத்தின் பாதுகாவலனாக, அச்சமின்றியும் எவ்வித விருப்பு, வெறுப்பின்றியும் அவர் பணியாற்றுவார் என்று ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

திரவுபதி முர்முவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Thanks: Video Credit ANI