சென்னை:

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் இன்று சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் 24-ந்தேதி யுடன் முடிவடையும் நிலையில், புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து,  தற்போதுள்ள சட்டமன்ற எம்எல்ஏக்கள் அடிப்படையில் அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு தலா   3 எம்.பி.க்ள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில் திமுக கூட்டணி சார்பில் 3 பேர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. சார்பில் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.