டெல்லி: பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்றுகாலை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கை தீர்மானத்தை அவைத்தலைவர் வெங்கைநாயுடு வாசித்தார். இதையடுத்து,  மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா தொற்று காரணமாக காலை, மாலை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் மாநிலங்களவையும், பிற்பகல் மக்களவையும் கூடு, விவாதங்களை தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த  இந்தியாவின் இசைக்குயில் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், அவரது  உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு  பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று காலை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை அவை கூடியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் குறிப்பை வாசித்தார். அப்போது, ‘லதா மங்கேஷ்கரின் மறைவால், இந்திய இசை மற்றும் திரைப்பட உலகம்,  ஒரு பழம்பெரும் பின்னணிப் பாடகியையும், மனிதநேயமிக்க மனிதரையும், உயர்ந்த ஆளுமையையும் நாடு இழந்துவிட்டது. அவரது மறைவால் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இசை உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது’ என புகழாரம் சூட்டினார்.

அதையடுத்து, அவை உறுப்பினர்கள்  அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.