சென்னை:

மிழக அரசியலில் எடப்பாடி போல அதிசயங்கள் நடக்கும் என ரஜினி கூறியதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமலுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும் என்று தெரிவித்தவர், கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வர் ஆவார் என நினைத்திருப்பாரா என்று, எடப்பாடியை வம்புக்கு இழுத்து பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அதிமுக அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நாளேட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த சர்ச்சைப் புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியதில் தவறில்லை என்றார். மேலும்,  ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். பாட்ஷா படத்தின்போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.காலம் தாழ்த்திவிட்டார் என்றும் கூறினார்.

சர்ச்சைப் புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சசிகலா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தவர் தற்போது எடப்பாடியின் முதல்வர் பதவி குறித்தும் பேசியிருப்பது, அதிமுக அமைச்சர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத சூழலை  வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.