ராஜீவ் கொலை குற்றவாளிகள்: அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன் படி விடுதலை செய்க! கருணாநிதி!!

Must read

1rajivoooo
சென்னை:
ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி விடுதலைசெய்ய தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர், முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராஜீவ் கொலையாளிகள் அனைவரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435-ன் கீழ் விடுதலை செய்யப்போவதாக சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். அந்த அறிவிப்பில் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்திருப்பதாகவும், மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கவில்லை என்றால், மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏழு பேரையும் விடுவிக்கப்போவதாகவும் சட்டப்பேரவையில் அறிவித்தாரா? இல்லையா? ஏன் இதுவரை விடுதலை ஆகவில்லை?
இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில், மத்திய அரசின் முன் அனுமதி பெற்ற பிறகே மாநில அரசு விடுவிக்க முடியும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435-க்கு விளக்கமளித்து தீர்ப்புக் கூறியது.
தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கப் பிறப்பித்த உத்தரவு சரியா? தவறா? என்பதை விசாரித்து தனியாக தீர்ப்பளிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய மாநில அரசுக்கு குற்றவியல் நடை முறைச் சட்டம் 435-ஐ தவிர அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன் படி அதிகாரம் உண்டு.
இந்த அதிகாரத்தின் படி மாநில அரசு அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து, விடுதலை செய்வது என்று முடிவெடுத்து மாநில கவர்னருக்கு அனுப்பி விடுதலை செய்ய முடியும். 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு உள்ள உரிமைகள் இது வரை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டதில்லை.
மேலும், அரசியல் சாசனப் பிரிவு 161-ன் படி விடுதலை செய்வதில், குற்றவாளிகளின் வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்ததா?, மாநில போலீஸ் விசாரித்ததா? என்பது போன்ற நிபந்தனைகளும் இல்லை. அது மாநில அரசுக்கு வழங்கப்பட்ட முழுமையான அதிகாரம். ஆனால் இந்த அதிகாரத்தை ஜெயலலிதா பயன்படுத்தாமல், மீண்டும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள 435-வது பிரிவு அதிகாரத்தைப் பயன்படுத்தியே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா? அல்லது மாநில அரசுக்கு இருக்கிறதா? என்ற வழக்கில், சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் முன் அனுமதி பெற்றே குற்றவாளிகளை விடுவிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், குற்றவாளிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 161 வழிவகுக்கிறது. இதைப் பயன்படுத்தி, யாரையும் கேட்காமல் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் தற்போது பேரறிவாளன் சிறைக்குள்ளே கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கப்பட்டதற்கு சிறைத்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு தக்க மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.உடனடியாக பேரறிவாளனையும், அவருடன் கைதானவர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க, தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article