திருநாவுக்கர் கடந்து வந்த பாதை: பாம்புகளும், ஏணிகளும்!

Must read

அரசியல் பரமபதத்தில் நிறைய ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்தவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆர். காலத்தில் அறந்தை தொகுதி கடந்து அந்த மாவட்டத்துக்கே அரசராக இருந்தார் திருநாவுக்கரசர்.  அரசியலில் ஜெயலலிதா முக்கியத்துவம் பெற காரணமானவர்களில் ஒருவர் இவர். பின்னாட்களில் தனிக்கட்சி கண்டு சறுக்கினார். இடையில் பாஜகவில் சேர்ந்து கொஞ்சம் ஜொலித்தார். அடுத்து காங்கிரஸ்… இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியல் வானில் கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரமாய் இருந்தவர், இப்போது மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார்…. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள தீயத்தூர் கிராமத்தில் 1949 மே 7-ம் தேதி பிறந்தவர் திருநாவுக்கரசர். தந்தை சுப்பராமன். தாயார் காளியம்மாள்.
எம்.ஜி.ஆர். என்ற வசீகர சக்தியால் ஈர்க்கப்பட்டவர்களில் திருநாவுக்கரசரும் ஒருவர். எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வில் தன்னை மிக இளம் வயதிலேயே இணைத்துக்கொண்டார்.
1977ம் ஆண்டு முதன் முறையாக அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் திருநாவுிக்கரசர். அப்போது அவருக்கு வயது 27தான்.
அதன் பிறகு அரசியல் பரமபதத்தில் அவர்களுக்கு ஏணிகள்தான்…
எம்.ஜி.ஆர்.தான் ஏணி
எம்.ஜி.ஆர்.தான் ஏணி

1980, 1984, 1989, 1991, 1996 என ஆறு முறை தொடர்ந்து அறங்தாங்கி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977 முதல் 1980 வரை சட்டப்பேரவை துணைத் தலைவர், 1980 முதல் 1988 வரை எம்ஜிஆர் அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, திருநாவுக்கரசருக்கு சறுக்கல்கள் ஆரம்பித்தது.
அதிமுக பிளவுபட்டபோது, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதிமுக (ஜெ) அணியின் முக்கியத் தளகர்த்தராக  விளங்கினார்.  ஆனால் விரைவிலேயே ஜெயலலிதாவுக்கும் திருநாவுக்கரசருக்கும் கருத்து வேற்றுமை எழுந்தது.   1991-ல் அதிமுகவில் இருந்து விலகி அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக..
ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக..

அந்தத் தேர்திலில்திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பின்னர், கட்சியை  கலைத்து விட்டு மீண்டும்  அதிமுகவில் இணைந்தார். மீண்டும் பிணக்கு. மறுபடி அதிமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.
1998 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
1999 மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஏணியில் ஏறினார் திருநாவுக்கரசர். திமுக – பாஜக கூட்டணியில் புதுக்கோட்டையில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2002-ல் எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவில் இணைத்தார். அதைத் தொடர்ந்து வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பா.ஜ.க.வில்..
பா.ஜ.க.வில்..

2004ம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் மீண்டும் சறுக்கல்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. திருநாவுக்கரசர் போட்டியிடக் கூடாது என அதிமுக நிபந்தனை விதித்ததால் அவர் அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும், 2004-ல் அவர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக அகில இந்திய செயலாளர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டது.
2009 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் பாஜக அந்தத் தேர்தலில் இழந்தது.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவின் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார் திருநாவுக்கரசர்.
காங்கிரஸில்..
காங்கிரஸில்..

பிறகு, 2009 நவம்பர் 9-ம் தேதி டில்லியில் அன்றைய  (காங்கிரஸ்) மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு பெரும் பின்னடைவு. எந்தத் தொகுதியில் ராஜாவாக வலம் வந்தாரோ… அவர் கைகாட்டின வேட்பாளர் வெற்றி பெற்றாரோ.. அந்த  அறந்தாங்கியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஆனாலும் 2013ம் ஆண்டு அவருக்கு ஒரு ஆறுதல். அந்த வருடம் ஜூன் 16-ம் தேதி காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதோ இப்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார்.
அவரது நாற்பதாண்டு கால அரசில் பரமபதத்தில் அவர் சந்திக்காத ஏணிகளும் இல்லை, பாம்புகளும் இல்லை.
ஆனால்  ஊழல் புகாரில் சிக்காதது, அனைவரிடமும் எளிமையாக பழகுவது, தொண்டர்களிடம் நெருக்கம், கட்சிக்காக செலவழிப்பது,  தேர்தல் களப்பணி அனுபவங்கள், சக கட்சி தலைவர்களிடம் (ஜெயலலிதா தவிர்த்து) நல்ல நட்பு என்று பல பாஸிட்டிவான அம்சங்கள் அவருக்கு உண்டு.
அதே நேரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி என்பது வித்தியாசமானது.
ஆம்..  திருநாவுக்கரசர்   தனது  அரசியல் வாழ்க்கையில் ஏணிகளையும், பாம்புகளையும் நிறையவே சந்தித்திருக்கிறார். ஆனால் தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி என்பது, ஏணி போல் தோன்றும் பாம்பு. இதுவரையிலான தனது ஒட்டுமொத்த அரசியல் அனுபவத்தையும், சாதுர்யத்தையும் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.
காங்கிரஸின் தமிழக தலைவர்கள் பலர் அவரை வாழ்த்தியிருக்கிறார்கள். நாமும் வாழ்த்துவோம்.

More articles

Latest article