சென்னை:
மத்தியஅரசு பாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு அளிப்பதாக ரஜினிகாந்த் ஓப்பனா தெரிவித்து உள்ளார். மேலும், மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தி போராட்டத்தை தூண்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
தர்பார் படத்தின் நஷ்டம் விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் மீது விநியோகஸ்தர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுக் களை கூறி வரும் நிலையில், இன்று திடீரென தனது போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அப்போது, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள சிசிஏ சட்டத்தை ஆதரிப்பதாகவும், இதன் மூலம் இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தவர், இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போரடுவேன், நான் முஸ்லிம் சகோதரர்களுடன் நிற்பேன் என்று தெரிவித்தவர், இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என சில அமைப்புகளால் பீதி கிளப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
அதுபோல என்ஆர்சி-க்கு நடைமுறை இன்னும் வகுக்கப்படவில்லை என்று கூறியவர், என்பிஆர் எனப்படும் தேசிய மமக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது நடத்தப்பட வேண்டும், அப்போதுதான் யார் வெளிநாட்டவர் என்பது தெரிய வரும் என்றார்.
அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டிய ரஜினி, இந்த சட்டத்தில்இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என பீதி கிளப்பப்படுகிறது என்றார்.
மாணவர்ளுக்கு ஒன்றே ஒன்று கூறிக்கொள்கிறேன்…தீர விசாரித்த பிறகு போராட்டத்தில் ஈடுபடுங்கள், அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்திக்கொள்வார்கள் என்றும், உங்கள் மீது எப்ஐஆர் போட்டால் வாழ்க்கையே போய்விடும் என எச்சரித்தார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யவர், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை என்று கூறினார்.
வருமான வரி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன்; சட்டவிரோதமாக எந்த செயலும் செய்யவில்லை என்று கூறிய ரஜினி, வட்டிக்கு விடுவதாக செய்திகள் வந்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
ரஜினியினி இன்றைய ஓப்பன் பேட்டி தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.