சென்னை: பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படை தலைநகர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆவின் முறைகேடு, அரசு வேலை வாங்கி தருவதாக முறைகேடு உள்பட ஏராளமான முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் மீது, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்பதால், ராஜேந்திர பாலாஜி கடந்த இரு வாரமாக தலைமறைவாக இருந்து வருகிறார்.

இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான பல அதிமுகவினரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை யினர், திருப்பத்தூரை அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரை தேடும் பணியில் 8 தனிப்படைகளை அமைக்கப்பட்டு,  நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும், அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும், வெளிநாடு தப்பி சென்றுவிடாதபடி லுக்அவுட் நோட்டீசும் விடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  ராஜேந்திர பாலாஜி டெல்லியில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதால், அவர் டெல்லியில் முக்கிய நபர் ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்ய காவல்துறையினர் டெல்லிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.